உதகை: மருத்துவம் படிக்க இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த பெண் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்கு முறை முயற்சித்து, நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், கோத்தர், குரும்பர், பனியர், காட்டுநாயக்கர் ஆகிய 6 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். காலமாற்றத்தில் பழங்குடியின மக்கள் தற்போது கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், இருளர் பழங்குடியின மாணவி ஒருவர், தற்போது முதல் முறையாக மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார்.
கோத்தகிரி சோலூர்மட்டம் அடுத்த தும்பிபெட்டு பகுதி இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் பாலன். இவருடைய மனைவி ராதா. அந்த பகுதியில் பாலன் தேயிலை விவசாயியாகவும், ஆசிரியையாக ராதாவும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ஸ்ரீமதி (20), 2019-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
இதைத்தொடர்ந்து, மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில், யூடியூப் வீடியோக்களை பார்த்து தானாகவே முயன்று நீட் தேர்வு எழுதினார். ஆனால், முதல் 3 ஆண்டுகள் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான நீட் தேர்வில் 370 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றார். இதில், இவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது.
இது குறித்து ஸ்ரீமதி கூறும்போது: "கோத்தகிரி பகுதியிலுள்ள ஹில்போர்ட் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தேன். இரண்டு முறை தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால், என்னால் சேர முடியவில்லை. மருத்துவம் படிப்பதற்காக, வேறு எந்த படிப்புகளுக்கும் சேராமல் மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன்.
தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய உள்ளேன். குழந்தைகள் நல மருத்துவராக முடிவு செய்துள்ளேன்" என்றார்.
Thank you, Hindu Tamil and Public App
Comentarios