top of page

இஸ்ரோ செல்லும் நீலகிரி பழங்குடி மாணவர்கள்!


தமிழகத்தின் `அகஸ்தியர்' செயற்கைக் கோள் - இஸ்ரோ செல்லும் நீலகிரி பழங்குடி மாணவர்கள்!

இஸ்ரோ செல்லும் நீலகிரி பழங்குடி மாணவர்கள்இஸ்ரோ செல்லும் நீலகிரி பழங்குடி மாணவர்கள் கல்வி செய்திகள்

இந்தியச் சுதந்திரத்தின் 75-வது ஆண்டை போற்றும் வகையில் நாடு முழுவதுமிருந்து 75 செயற்கைக்கோள்களை மாணவர்கள் மூலம் தயாரித்து விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. இந்த முயற்சியில் நாடு முழுவதுமிருந்து மாணவர்கள் தங்களின் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 'அகஸ்தியர்' என்ற பெயரில் செயற்கைக்கோள் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இதில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 82 மாணவ மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரியில் 2 மாணவிகள், 3 மாணவர்கள் என 5 பழங்குடி மாணவ மாணவிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் செயற்கைக்கோள்கள் குறித்துக் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆன்லைன் மூலம் பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரிலுள்ள இஸ்ரோ வளாகத்தில் நடைபெற உள்ள 4 நாள் சிறப்புப் பயிற்சி முகாமில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இஸ்ரோ செல்லும் நீலகிரி பழங்குடி மாணவர்கள்இஸ்ரோ செல்லும் நீலகிரி பழங்குடி மாணவர்கள் இது குறித்து நம்மிடம் பேசிய பழங்குடி மாணவ மாணவிகள், "எங்களுக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பை நினைத்து ஆச்சரியமாக இருக்கிறது. இஸ்ரோவுக்கு நேரில் செல்ல ஆர்வமாக இருக்கிறோம். முதல் முறையாக வெளி மாநிலத்திற்குச் செல்கிறோம். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வோம்" என்றனர்.

மாணவர்களை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான கரிக்கையூர் பழங்குடி பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் பேசுகையில், "செயற்கைக்கோள் என்றால் என்ன, அது எப்படி விண்ணில் செலுத்தப்படுகிறது, அதன் செயல்பாடுகள் என்ன, அதன் மூலம் நமக்கு ஏற்படும் பயன்கள் என்ன... போன்ற பலவற்றை இவர்கள் அறிந்து வருகின்றனர். தற்போது நடைபெறவுள்ள இந்த 4 நாள் பயிற்சி முகாம் இவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும். நாளை இவர்களே விண்வெளி ஆய்வாளர்களாக உயரவும் வாய்ப்பு இருக்கிறது" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இஸ்ரோ செல்லும் நீலகிரி பழங்குடி மாணவர்கள்இஸ்ரோ செல்லும் நீலகிரி பழங்குடி மாணவர்கள் பழங்குடி மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கெங்கரை ஊராட்சியின் தலைவர் முருகன் கூறுகையில், "ஒரு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இந்த வாய்ப்பு வந்தது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பழங்குடி குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். பல பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களைத் தேர்வு செய்தோம்.

10-ம் வகுப்பைச் சேர்ந்த மஞ்சுளா, ரேவதி, ராஜன், 9ம் வகுப்பைச் சேர்ந்த சரவணன், 12-ம் வகுப்பை முடித்த எம்.சரவணன் என மொத்தம் 5 பேரைத் தேர்வு செய்தோம். நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை பயிற்சி முகாம் நடக்கிறது. இவர்களுக்கான செலவுகளைத் தன்னார்வலர்கள் சிலர் ஏற்றுக் கொண்டனர்" என்றார்.

சாதனைகள் புரிய வாழ்த்துகள் மாணவ, மாணவிகளே!

சதீஸ் ராமசாமி & கே.அருண் விகடன்



46 views0 comments
bottom of page